டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் திமுகவினர் இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி முதல்வரான ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர்கள் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் “மக்களவை தேர்தலுக்கு முன்பாக தோல்வி பயத்தால் உந்தப்பட்டு டெல்லி முதல்வரை பாசிச பாஜக அரசு கைது செய்து வெறுக்கத்தக்க செயலை செய்துள்ளது. ஹேமந்த் சோரனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் குறிவைக்கப்பட்டிருக்கிறார்.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தை சீரழிக்கும் ஒரு பாஜக தலைவர் கூட விசாரணையோ அல்லது கைதோ செய்யப்பட்டவில்லை. இந்த கொடுங்கோன்மை பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது. பாஜகவின் உண்மை நிறம் வெளிப்படுகிறது. இது இந்தியா கூட்டணி வெற்றி பயணத்தை பலப்படுத்துகிறது” என தெரிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் தயாநிதி மாறன் மற்றும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.