நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள், பழச்சாறு கடைகளை நாடும் நிலை உள்ளது.
இந்நிலையில் நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தென் தமிழகம், உள் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முன்னதாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது என்பது கூடுதல் தகவல்.