மதுரை மாநகராட்சி 2023-24 பட்ஜெட் கடந்த வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அது தொடர்பான விவாத கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள திமுக கவுன்சிலர்கள் மேயர் இந்திராணிக்கு எதிராக கூட்ட அரங்கினுள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாமன்ற குழு தலைவராக 58வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன் கடந்த 2022 டிசம்பர் 29 அன்று நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்பாட்டம்.
குழு தலைவருக்கு தனி அறை ஒதுக்க வேண்டும், மாமன்ற கூட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கான அறை, மற்ற மாநகராட்சிகளில் உள்ள குழு தலைவர்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் ஆகியவை அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்த இதே கோரிக்கைகள் குறித்து, கடந்த ஜனவரி 23 அன்று பதிலளித்த மேயர் இந்திராணி, "கட்சி வழங்கிய சிறப்பு நிலை பொறுப்பு குறித்த சான்றிதழை சமிர்ப்பிக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இந்த நியமனம் தொடர்பாக வெளியான அறிவிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குழு தலைவர் ஜெயராமன் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.