முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார். அவர், "விஜய்யின் கூட்டங்கள் வாக்குகளாக மாறாது. நடிகர் விஜய் திரட்டிய கூட்டத்தை விட, ரஜினிகாந்த் மற்றும் அஜித்தை பார்க்க இன்னும் அதிகமான கூட்டம் வரும்," என்று கூறினார்.
விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி, "விஜய், திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால், அவர் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும். அவர் தனித்து போட்டியிட்டால், திமுக அவரது தமிழக வெற்றிக் கழகத்தை எளிதில் அழித்துவிடும். தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அதிமுக கூட்டணியில் இணைந்து பாஸ் மார்க் பெற வேண்டும்," என்று அறிவுறுத்தினார்.
எம்ஜிஆருக்குப் பிறகு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் விஜயகாந்த். தேமுதிக தொடங்கியபோது மதுரையில் அவருக்கு கூடிய கூட்டம் அளப்பரியது. அவருக்கு பக்குவப்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள், ஆனால் விஜய்க்கு அத்தகைய தொண்டர்கள் இல்லை," என்றும் குறிப்பிட்டார்.
விஜய், 'திமுக மற்றும் தவெகவுக்கு மட்டுமே போட்டி' என்று கூறியதை பற்றி ராஜேந்திர பாலாஜி, "அது உண்மைதான். ஆனால், அந்த போட்டி முதல் இடத்திற்காக அல்ல; இரண்டாவது இடத்திற்காகத்தான். 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு மாற்றாக, மக்கள் எடப்பாடி பழனிசாமியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்," என்று திட்டவட்டமாகக் கூறினார்.