சேலத்தில் இன்று நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.
உழைப்பால் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவியில் இருப்பதாகவும், அதிமுகவினர் உழைக்க பிறந்தவர்கள், மற்றவர்கள் உழைப்பில் வாழ்பவர்கள் அல்ல என்றும் கூறினார்.
மேலும் திமுக ஒரு கட்சி அல்ல, கம்பெனி என்றும், திமுக போல் நாங்கள் குடும்ப ஆட்சி நடத்தவில்லை என்றும் கூறிய முதலமைச்சர் பழனிச்சாமி, எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது என்றும், பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை காண முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கருணாநிதி உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார் என்றும், இலங்கையில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் துயரங்களை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் கூறிய முதல்வர், திமுக, காங்கிரஸை போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.