Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

Senthil Velan
திங்கள், 1 ஜூலை 2024 (15:33 IST)
மருத்துவப்பெருமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பிறகும், உரிய ஊதியம் வழங்காமல் திமுக அரசு இறுமாப்புடன் தட்டிக் கழிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட பிற உயிர்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும் உற்ற நேரத்தில் உரிய மருத்துவமளித்து உயிர்காக்கும் உன்னதப்பணி புரிவதாலேயே மருத்துவர்களை, கண் முன்னே நடமாடும் கடவுளாக மானுடச் சமூகம் போற்றி வருகிறது. உலகில் ஏற்பட்ட பல பெருந்தொற்று நோய்களிலிருந்து மருத்துவத்துறையினர்தான் மனித உயிர்களைக் காத்தனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்கள் கொரோனா கொடுந்தொற்று முதல் தற்போதைய கள்ளச்சாராயக் கொடுமைகள் வரை இரவுபகல் பாராத அர்ப்பணிப்பு மிக்கக் கடும் உழைப்பினால், தங்கள் இன்னுயிரைப் பொருட்படுத்தாது பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றினர் என்பது நம் ஒவ்வொருவரும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய பெருந்தொண்டாகும்.

இந்தியா முழுவதும் மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகின்ற இன்று (சூலை-1) மக்கள் உயிர்காக்க அரும்பாடாற்றி வரும் மருத்துவர் பெருந்தகைகள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். கருணை உள்ளமும், கனிந்த இதயமும் கொண்ட போற்றுதற்குரிய மருத்துவப்பெருமக்களை குறையேதும் இன்றி பாதுகாக்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையாகும்.

ஆனால், உயிர்களைக் காக்க நாள்தோறும் போராடிவரும் மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இன்றைக்கு தங்கள் உரிமைகளைக் காக்க ஆண்டுக்கணக்கில் போராடிவரும் துயரம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதைப்போல கடந்த அதிமுக அரசினைப்போன்று , தற்போதைய திமுக அரசும், ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.

ஆட்சிக்கு வந்தால் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளைக் கடந்த பிறகும் அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல், காலம் கடத்துவது மருத்துவர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் பலமுறை வலியுறுத்திய பிறகும், அதற்காக மருத்துவப்பெருமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பிறகும், உரிய ஊதியம் வழங்காமல் திமுக அரசு இறுமாப்புடன் தட்டிக் கழிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. 

ALSO READ: விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

ஆகவே, தமிழ்நாட்டிலுள்ள 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர் என்பதை உணர்ந்து, மாண்பமை மருத்துவப்பெருமக்களின் பெருந்தொண்டிற்கு மதிப்பளிக்கும் வகையில், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அரசாணை 354-ன் படி, ஊதியப்பட்டை நான்கை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் விரைந்து நிறைவேற்றித்தர வேண்டுமென்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.1300 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை..!

அந்தரங்க புகைப்படம்... கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறித்த தந்தை - மகன்..!

மாணவிகளை கடித்த பாம்பு.. சர்வே எடுக்க வேற ஆளே கிடைக்கலையா? - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

35 பேரை காரை ஏற்றிக் கொன்ற நபர்! சாலையெங்கும் சிதறிக் கிடந்த பிணங்கள்! - சீனாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments