கருணாதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடம் தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
திமுகவில் மீண்டும் இணைய முயற்சித்துக் கொண்டிருக்கும் அழகிரி கடந்த 5ம் தேதி தனது அரசியல் பலத்தை நிரூபிப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள தனது தந்தை கலைஞரின் நினைவிடத்தை நோக்கி பேரணி சென்றார்.
அதன் பின் மறைந்த கலைஞரின் நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று திருவாரூரில் அனுசரிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அழகிரி கூறியதாவது;-
கடந்த 2014ஆம் ஆண்டில் தி.முக விலிருந்து நீக்கப்பட்டேன். அதற்கு பிறகு கலைஞரை சந்திக்கும் வாய்ப்புகளை இழந்து விட்டேன். மற்றவர்களைவிட கலைஞருக்கு என்னைக்குறித்து நன்றாக தெரியும்.கலைஞர் என்னைப்பற்றி ஒரு புத்தகத்தில் குறிப்பிடும் போது,’அப்பாவுக்கு தப்பாமல் பிறந்தவன் நீதான். நான் அடைந்த சோதனைகளை நீயும் அடைந்திருக்கிறாய்.’ என்று அவர் கைப்பட எழுதியதை நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
மேலும் திருவாரூரில் வரப்போகிற இடைத்தேர்தலில் நிற்கும்படி பலரும் என்னை வற்புறுத்தினார்கள். தேர்தல் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என அவர்களிடம் கூறிவிட்டேன்.
ஒருவேளை நான் தேர்தலில் போட்டியிட்டால் ”மக்களிடம் வாக்குகள் கேட்பேனோ இல்லையோ, ஆனால் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடம் கூறுவேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.