கொரோனா பீதியை அடுத்து மருத்துவமனைகளில் விடுப்பின்றி பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஒருவாரம் சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் விடுப்பின்றி வேலை செய்து வரும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள ஒரு வாரம் சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி தமிழக சுகாதாரத் துறை மருத்துவக் கல்லூரி இயக்குநர் நாராயண பாபு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ’ அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணி செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மார்ச் 24ஆம் தேதி முதல் சுழற்சி முறையில், மூன்றில் ஒரு பகுதியினர் விடுப்பு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. விடுப்பு எடுத்த மருத்துவர்களின் விவரங்களை உடனடியாக டிஎம்எஸ் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒரு வார விடுப்பில் தனிமையில் இருக்கும் மருத்துவ ஊழியர்கள் மருத்துவமனை டீன் கொடுக்கும் திட்டமிடலை பின்பற்ற வேண்டும்.விடுப்பில் இருக்கும் மருத்துவர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு வரத் தயாராக இருக்க வேண்டும். அவர்களின் செல்போன் எப்பொழுதும் பயன்பாட்டிலேயே இருக்க வேண்டும். இந்த ஒரு வாரக் காலத்தில் விடுப்பில் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு பணிக்குச் செல்லக் கூடாது.
இந்த ஒரு வாரக் காலம் ஆன் டியூட்டியாகவே கருதப்படும் என்று ஒருவார சுழற்சி முறை தனிமைப்படுத்துதல் முடிந்தவுடனேயே பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் ஆன் ட்யூட்டி ரத்து செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஒருவாரம் விடுப்பு குறித்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் கூறுகையில், “செவிலியர்களுக்கு மாதம் ஒரு சி எல், ஐந்து நாட்கள் வார விடுமுறை என மொத்தம் ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கும். அந்த விடுப்பை தற்போது மொத்தமாகக் கொடுக்கிறார்களா சிறப்பு விடுப்பு கொடுக்கிறார்களா என்பது தெரியவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.