தலைமைச் செயலகத்தில் நடந்த முதல்வருடான ஆலோசனைக்கு பிறகு மருத்துவ குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைவதை அடைத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவர் குழுவினர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவ குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர் கூறியதாவது, ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல.
அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தல்.
சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது. தமிழகத்தில் 80% பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தான் கொரோனா இருக்கிறது. எனவே பயப்பட வேண்டாம். அதேபோல கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சப்படத் தேவையில்லை.
இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனைகளை அதிகம் மேற்கொள்ளும் மாநிலம் தமிழகம் மட்டுமே. நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். சுவை, மணம் தெரியாவிட்டால் காய்ச்சல் மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் பொதுமுடக்கத்தை தீவிரமாக்கலாம்.
எனவே, பொதுமுடக்கம் நிட்டிப்பா அல்லது கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்படுமா என்பதை தமிழக அரசு தான் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளனர்.