சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்க்க பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் கோடிக்கணக்கானோர்களில் நானும் ஒருவன். அவர் அரசியலுக்கு கண்டிப்பாக வரவேண்டும். தூத்துகுடி பிரச்சனை உள்பட எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கவில்லையே என ரஜினி உள்பட அனைத்து நடிகர்களிடமும் மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
ஆனால் அதே மக்களுக்கு அவர்களுடைய தொகுதி எம்.எல்.ஏ, எம்பி யார் என்பது கூட தெரியாது. முதலில் ஓட்டு போட்ட எம்.எல்.ஏக்கள், எம்பிக்களிடம் மக்கள் கேள்வி கேட்க தொடங்கினால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.
ரஜினிகாந்த் இப்போதுதான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்குள் அவரிடம் கேள்வி கேட்பது முறையல்ல. ஆட்சி அமைத்தவுடன் அவர் எதுவும் செய்யவில்லை என்றால் பின்னர் கேள்வி கேட்கலாம் என்று ஞானவேல்ராஜா கூறினார். இவருடைய இந்த கருத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.