Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் தர முடியாது என்று சித்தராமையா கூறுவது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: ராமதாஸ் கண்டனம்..!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (18:04 IST)
கர்நாடக அணைகளில் 92 டி.எம்.சி தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று சித்தராமையா கூறுவது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்என பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பது போன்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது ஆகும். கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவு 114.57 டி.எம்.சி ஆகும். அதில் 92.87 டி.எம்.சி, அதாவது 81% தண்ணீர் உள்ளது. அதைக் கொண்டு தமிழகத்துக்கு இன்று வரை வழங்க வேண்டிய 44 டி.எம்.சியை எளிதாக வழங்க முடியும். அவ்வாறு வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை எந்த சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிக்க இயலும்.
 
ஆனால், கர்நாடக அணைகளில் 92.87 டி.எம்.சி, அணைக்கு கீழ்புறம் உள்ள நீர்நிலைகளில் சுமார் 40 டி.எம்.சி தண்ணீரை வைத்திருக்கும் கர்நாடகம், அதில் மூன்றில் ஒரு பங்கை தமிழகத்திற்கு தர மறுப்பது மனசாட்சியற்ற, மனிதநேயமற்ற செயலாகும். காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வில்லை என்றால், காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள குறுவைப் பயிர்களில் பெரும்பாலானாவை கருகும் ஆபத்து உள்ளது.
 
8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த இரு ஆண்டுகளாகத் தான் காவிரி பாசனப் பகுதி உழவர்கள் குறுவை சாகுபடியை வெற்றிகரமாக செய்தனர். இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் குறுவைப் பயிர்கள் கருகி விட்டால், அதனால் ஏற்படும் இழப்புகளை தாங்க முடியாமல் விவசாயிகள் தவறான முடிவுகளை எடுத்து விட்டால், அது அவர்களின் குடும்பங்களுக்கு பேரிழப்பாக அமைந்துவிடும்.
 
தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை காவிரி நடுவர் மன்றம் தீர்மானித்திருக்கிறது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. ஆனால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும் மதிக்க மாட்டோம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்க மாட்டோம் என்பது கூட்டாட்சி தத்துவத்தையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் சிறுமைப்படுத்தும் செயலாகும். இது இரு மாநில நல்லுறவை சீரழிக்கும். இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.
 
கடந்த 2002-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குறுவைப் பயிர்களைக் காக்க காவிரியில் தண்ணீர் விட கர்நாடக அரசு மறுத்தது. காவிரி ஆணையமும், உச்ச நீதிமன்றமும் ஆணையிட்ட பிறகும் கூட தண்ணீர் திறக்க கர்நாடகம் முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் தமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அப்போதைய கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை கடுமையாக கண்டித்தது. நிறைவாக எஸ்.எம்.கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதுடன், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தவாறு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டார். இதிலிருந்து சித்தராமய்யா பாடம் கற்க வேண்டும்.
 
காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு கூறினால், அதை காவிரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசும் எளிதாக கடந்து செல்லக் கூடாது. அது கடமை தவறிய செயலாகவே அமையும். தமிழ்நாட்டில் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற காவிரியில் போதிய அளவு தண்ணீரை திறந்து விடுமாறு, அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதற்கு கர்நாடக அரசு உடன்பட மறுத்தால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிகளின்படியும் கர்நாடக அரசு மீது கடும் நடவடிக்கையை மத்திய அரசு வழங்க வேண்டும்; தமிழகத்திற்கு நீதி வழங்க வேண்டும்.
 
தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை அடுத்த சில நாட்களுக்குள் கர்நாடகம் திறந்து விடவில்லை என்றால், அதனால் தமிழக அரசுக்கும், உழவர்களுக்கும் ஏற்படும் இழப்பை கர்நாடகத்திடமிருந்து வசூலிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. 2012-13ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கத் தவறியதற்காக கர்நாடகம் ரூ.2,479 கோடி இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளது.
 
எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறக்க ஆணையிட வேண்டும்; கர்நாடகம் தண்ணீர் திறக்கும் வரை காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களுக்கும், மின்னுற்பத்தி இழப்பால் தமிழக அரசுக்கும் ஏற்பட்ட இழப்புகளை கர்நாடகத்திடமிருந்து வசூலித்துத் தர வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். நாட்களைத் தாமதிக்காமல் உடனடியாக அந்த வழக்குகளை தொடர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

GATE 2025 தேர்வு எப்போது? முழு அட்டவணை இதோ..!

மகளை விபச்சாரத்தில் தள்ளிய தாய்.. புரோக்கராக மாறிய 2வது கணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

11 தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி

தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.. அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments