இந்தியாவின் சிறந்த சுற்றுலாதலங்களான 10ல் 5 தமிழகத்தில் தான் உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் தாஜ்மகாலை பின்னுக்குத் தள்ளி மாமல்லபுரம் சிற்பங்கள் முதலிடத்தை பிடித்துள்ளன. இது பல்லவ வம்சத்தினரும், ஒட்டுமொத்த தமிழர்களும் பெருமை கொள்ள வேண்டிய சாதனையாகும்!
இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகளில் 45.5% (1,44,984 பேர்) மாமல்லபுரத்தை பார்வையிட்டுள்ளனர். தாஜ்மகாலை பார்த்தவர்கள் 12.21% (38,922) மட்டுமே. தாஜ்மகாலுக்கு இணையான வெளிநாட்டவர்கள் (25,579 பேர்) சாளுவன்குப்பம் புலிக்குடைவரையை பார்வையிட்டுள்ளனர்.
செஞ்சிக்கோட்டை இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் வெளிநாட்டவரால் அதிகம் பார்க்கப்பட்ட 10 இடங்களில் 5 தமிழகத்தில் உள்ளன. தாஜ்மகாலை கடந்து பல்லவ பூமியின் அடையாளங்களை உலகம் அங்கீகரிக்கத் தொடங்கியிருப்பது நமக்கு பெருமை!
மொகலாயர்களின் கட்டடக் கலையை விட பல்லவர்களின் கட்டடக்கலை சிறப்பு மிக்கது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தின் சிறப்புகளை உலகம் அறிந்து கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்ட சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள்
வெளிநாட்டு பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டும். தமிழகத்தின் தொல்லியல் சிறப்பிடங்களை இணைக்கும் வகையிலான தொல்லியல் சுற்றுலா திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்!