TNSCVT சான்றிதழ்கள் ஏற்கப்படாது என்ற அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு 1089 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையில் தேசிய தொழிற்கல்வி மையம் (NCVT) வழங்கிய ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!
ஐ.டி.ஐ. படிப்புகளுக்கு NCVT போன்று தமிழ்நாடு மாநில தொழிற்கல்வி மையமும் (TNSCVT) சான்றிதழ் வழங்குகிறது. இரு சான்றிதழ்களும் அடிப்படையில் ஒன்று தான். ஆனால், TNSCVT வழங்கும் ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என்று கூறுவது அநீதியானது!
TNSCVT சான்றிதழை மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. தமிழக அரசு ஐடிஐகளிலும் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. அத்தகைய சான்றிதழை தமிழக அரசு பணிக்கே ஏற்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?
கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு TNSCVT வழங்கும் ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்களையும் டி.என்.பி.எஸ்.சி அனுமதிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்து விட்ட நிலையில், திருத்தப்பட்ட ஆள் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட வேண்டும்!