Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்..!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்..!

Mahendran

, சனி, 2 நவம்பர் 2024 (13:24 IST)
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? உடனடியாக போட்டித்தேர்வை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
 
தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டுதான் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு சுமார் 2000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக ஆள் தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்படாத நிலையில் 2024-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே மாதம் முடிவடைந்து ஆறு மாதங்களாகியும் ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படவில்லை.
 
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் வரைவுப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படுவதற்கு குறைந்தது ஓராண்டு ஆகும். அதன் பின்னர் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மேலும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அதன்படி பார்த்தால் 2021 முதல் 2026 வரை காலியான இடங்களுக்கு புதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படமாட்டார்கள். இது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும்.
 
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதை பாட்டாளி மக்கள் கட்சி குறைகூறவில்லை. மாறாக பாடத்திட்டத்தில் திருத்தம் செய்யப்படும் காலத்தைத்தான் விமர்சிக்கிறது. கடைசியாக 2021-ஆம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு இன்றுவரை மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளில் பாடத்திட்டத்தை மாற்றியிருக்கலாம். அதை விடுத்து அடுத்த போட்டித்தேர்வு அறிவிக்கப்படவிருக்கும் வேளையில் பாடத்திட்டத்தை மாற்ற இருப்பதாக கூறுவதை ஆசிரியர்கள் நியமனத்தை தாமதிக்கும் முயற்சியாகவே பார்க்கவேண்டி உள்ளது.
 
ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் முடங்கி கிடக்கின்றன. இப்போது பாடத்திட்ட மாற்றத்தை காரணம் காட்டி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தையும் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது. எனவே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு அனைத்து காலியிடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் புதிய அறிவிப்பு..!