திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் எது பேசினாலும் அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது. அதற்கு காரணம் அவரின் நகைச்சுவைத்தனமான பேச்சுதான்.
சட்டசபையில் இன்று கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்து பேசிய துரைமுருகன் சில கிராமிய பாடல்களை பாடிக்காடினார். அது கேட்டு அசந்து போன சபாநாயகர் தனபால், இவ்வளவு அழகாக பாடுகிறீர்கள். சிறுவயதில் நாடகங்களில் நடித்தது உண்டா? எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த துரைமுருகன் “சிறுயதில் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியர் கூறியது போல் உலகமே நாடக மேடை. எல்லோரும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சபாநாயகராக நீங்களும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள்” எனக்கூற சபையில் சிரிப்பலை எழுந்தது.
அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ் எழுந்து “துரைமுருகன் நவரசத்துடன் பேசுவதாக மறைந்த முதல் அம்மாவே பாராட்டியுள்ளார்” எனக்கூற, அதற்கு பதிலளித்த துரைமுருகன் “சினிமாதுறைக்கு சென்றிருந்தால் நானும் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன். சிவாஜி கணேசன் போல் பெரிய ஹீரோ ஆகியிருப்பேன்” எனக்கூற, அதிமுக, திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி சிரித்தனர்.