திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்பட எந்த கட்சியும் திமுகவுடன் இப்போதைக்கு தேர்தல் கூட்டணியில் இல்லை என்று கூறியிருந்தார்.
இவரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதோடு வைகோ, திருமாவளவன் ஆகியோரை கதிகலங்க செய்தது. இதனால், இவர்கள் இருவரும் தனித்தனியாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.
இதன் பின்னரே துரைமுருகனின் சர்ச்சை பேட்டிக்கு முடிவு வந்தது. அதோடு, வைகோ மற்றும் திருமாவளன் ஆகியோர் திமுகவுடன் கலந்துரையாடாமல் சில முடிவுகளை எடுத்ததால் துரைமுருகன் இவ்வாறு பேட்டி அளித்ததாக திமுக நெருங்கிய வட்டாரங்களில் செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில், பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டுவர துரைமுருகன் முயலுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இது தவறான தகவல் என இதை ஆ.ராசா மறுத்துள்ளார்.
இது குறித்து ஆ.ராசா கூறியது பின்வருமாறு, திமுக ஜாதி மறுப்பு இயக்கம். துரைமுருகன் அதில் ஒரு சீனியர் தலைவர். அவர் பிறப்பால் வன்னியர் என்பதால், பாமகவை திமுக கூட்டணிக்கு கொண்டுவர முயலுவதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை.
இது அவரை கொச்சைப்படுத்துவதை போன்றது. துரைமுருகன் கட்சியின் தலைமை, தொண்டர்கள் மனநிலையை அறிந்து பிரதிபலிப்பவர். தனிப்பட்ட விறுப்பு, வெறுப்புகளை கட்சிக்குள் கொண்டுவரமாட்டார் என தெரிவித்துள்ளார்.