சென்னையில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சனையை தற்காலிகமாக போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு சென்றால் கடும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின
துரைமுருகனின் இந்த எச்சரிக்கை சென்னை மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. பக்கத்து ஊரில் இருக்கும் துரைமுருகனே சென்னை மக்களுக்கு தண்ணீர் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தால் பக்கத்து மாநிலமான கர்நாடகம் எப்படி தண்ணீர் கொடுக்கும்? என்று சென்னை மக்கள் கேள்வி எழுப்பினர். மேலும் சென்னை கடந்த பல ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக இருந்து வரும் நிலையில் துரைமுருகனின் இந்த பேச்சால் நேற்று திமுகவுக்கு எதிரான டுவீட்டுகள் அதிகம் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னைக்கு குடிநீர் வழங்க பக்கத்து மாநிலமான கேரளாவே தானாக முன்வந்துள்ள நிலையில் பக்கத்து ஊரில் இருக்கும் திமுக பிரமுகர் சென்னைக்கு குடிநீர் தர விடமாட்டேன் என்று கூறியுள்ளது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இந்த நிலையில் திடீரென துரைமுருகன் தான் அப்படி சொல்லவே இல்லை என பல்டி அடித்துள்ளார். ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல நான் எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியாகும் தகவல் தவறு என்றும், ஒரு தவறான பிரசாரம் மூலம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை கண்டிக்கிறேன் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.