திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி குறை கூற அதிமுகவினருக்கு தகுதி இல்லை என துரைமுருகன் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும்படி கேட்ட போது, அதிமுக அமைச்சர்கள் வெள்ளை அறிக்கை மட்டுமல்ல வெள்ளரிக்காயையும் சேர்த்து தருகிறோம் என கிண்டலாக பேசினர். அதோடு ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இதுபோன்ற பேச்சுக்களால் கடுப்பான துரைமுருகன், தனது அறிக்கையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். துரைமுருகன் குறிப்பிட்டிருந்ததாவது, திமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்களா என்று மு.க.ஸ்டாலினிடம் முதல்வர் பழனிசாமி கேட்டிருக்கிறார்.
443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு ரூ.5 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீடு வரப்போகிறது என்று அறிவித்துவிட்டு, இப்போது ரூ.14 ஆயிரம் கோடி மட்டுமே பெற்றுள்ள முதல்வர் பழனிசாமிதான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியாகி இருக்கும் இந்த ரூ.14 ஆயிரம் கோடி விவகாரத்தை முதல்வரால் மறுக்க முடியுமா? வெளிப்படையான நிர்வாகத் திறமை, ஊழல் இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு விரைவாக அனுமதி போன்ற நேர்மையான நடவடிக்கைகள் மூலம் முதலீட்டை வெகுவாகத் திரட்டியது திமுக ஆட்சி.
ஆனால், அதிமுக ஆட்சியில் தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதிமுக ஆட்சியின் தோல்வியை மறைக்கவே திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் முதல்வர் பழனிசாமி விமர்சித்து வருகிறார்.
அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ள அதிமுக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பற்றியும், அவரது வெளிநாட்டுப் பயணங்கள் பற்றியும் விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என தெரிவித்துள்ளார்.