பொங்கலுக்கு அளிக்கப்படும் சிறப்பு தொகுப்பு குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பும், ஆயிரம் ரூபாய் பணமும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் பொங்கலுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் புயலுக்கு நிவாரணம் வழங்காத முதல்வர் எலெக்ஷன் வந்ததும் பொங்கல் தொகுப்பை அதிகப்படுத்தி வழங்குகிறார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி “கொரோனா காலத்தில் மக்களும், அரசும் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருந்தனர். தற்போது அதை தாண்டி வந்துள்ள நிலையில் மக்களுக்கு பொங்கல் கொண்டாடுவதில் இருக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு தொகுப்பு தொகையை அதிகரித்து அறிவித்துள்ளோம். இதுநாள் வரை மக்களுக்கு நிதி அளிக்கவில்லை என குற்றம் சாட்டிய ஸ்டாலின் தற்போது தொகுப்பு பணத்தை அதிகரித்து தருவதை எனது சுயநலம் என விமர்சிக்கிறார். பச்சோந்தி கூட நிறம் மாற நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் ஸ்டாலின் இஷ்டத்துக்கு மாறி மாறி பேசி வருகிறார்” என கூறியுள்ளார்.