நேற்று அமைச்சர்களுடன் முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தேவையற்ற கருத்துகளை பேச வேண்டாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அப்போது அதிமுக அமைச்சர்கள் பலர் ரஜினியை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தனர். பாஜக ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில் கூட்டணியில் உள்ள அதிமுக அமைச்சர்கள் ரஜினிக்கு எதிராக பேசியதால் கூட்டணிக்குள் பிரச்சினை இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது.
தொடர்ந்து பாஜக கூட்டணி குறித்தும், சசிகலா விவகாரம் தொடர்பாகவும் அதிமுக அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அரசியல் வட்டாரங்களில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அனைத்து அமைச்சர்களையும் தனித்தனியாக அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பிப்ரவரி 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அமைச்சர்களை தனியாக அழைத்து தேவையில்லாத எந்த கருத்துகளையும் பொதுவெளியில் பேச வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தியதாக பேசிக் கொள்ளப்படுகிறது.