விஜய் கட்சியுடன் கூட்டணி இருப்பதற்கான வாய்ப்பு குறித்து கேட்டதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் தன்னுடைய புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தை அறிமுகப்படுத்தி, தனது கட்சியின் மிகப்பெரிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். அந்த விழாவில் திமுக மற்றும் பாஜகவை தாக்கிய பேசிய நிலையில், எம்ஜிஆரின் பண்புகளை புகழ்ந்து பேசினார். மேலும், அதிமுகவை குற்றம் சாட்டாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, அவரிடம் “2026 தேர்தலில் விஜய்யின் கட்சியுடன் கூட்டணி அமையுமா?” என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், "கற்பனை கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாது," எனத் தெரிவித்தார்.
“தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் தங்களுக்கான மாநாடுகளை நடத்தி வருகின்றன; அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் மாநில மாநாட்டை நடத்தி இருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் அதில் பங்கேற்றனர்,” என அவர் மேலும் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
“விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லையே?” என்ற கேள்விக்கு, "அதிமுக தனது சிறப்பான செயல்திறன் மூலம் தன்னை நிலைநிறுத்தி கொண்டிருக்கிறது என்பதற்காகத்தான் அவர் விமர்சிக்கவில்லை," என்று அவர் பதிலளித்தார். “அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவீர்களா?” என்ற கேள்விக்கு, “அப்படியான கற்பனையான கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க இயலாது,” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.