சமீப காலமாக அதிமுக – பாஜக பிரமுகர்கள் தங்களிடையே கட்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கட்சிகள் கூட்டணியில் உள்ள நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டும் தனித்து போட்டியிட்டன. சமீப காலமாக அதிமுக – பாஜக பிரமுகர்கள் இடையே கூட்டணி கட்சி குறித்து எழுந்துள்ள ஒவ்வாமை பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்து வருவதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வரும் நிலையில், அதிமுகவின் பொன்னையன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அதை விமர்சிக்கும் வகையில் பேசி வருகின்றனர். இதனால் கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள எடப்பாடி பழனிசாமி ”தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக உறவில் விரிசல் இல்லாமல் நல்ல முறையிலேயே தொடர்ந்து வருகிறது. தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேச ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உள்ளது. ஒவ்வொரு கட்சியும் அதன் வளர்ச்சியில் அக்கறை கொள்வது இயல்புதான்” என கூறியுள்ளார்.