மாநிலம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்களுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், உணவகங்கள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளது. ஏழை. எளிய மக்களின் நலன் கருதி அவர்கள் உணவு அருந்துவதற்காக அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அம்மா உணவகங்களில் உணவு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மா உணவகங்களுக்கு சென்றார். மயிலாப்பூர் காமராஜர் சாலை மற்றும் பட்டினம்பாக்கம் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு சாப்பிட வரும் மக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். பிறகு அம்மா உணவக இட்லியை தானும் சாப்பிட்டு பரிசோதித்தார்.