Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சென்னையில் மின் தேவை புதிய உச்சம்.! மின்தடைக்கு காரணம் என்ன.? மின்வாரியம் விளக்கம்.!

EB

Senthil Velan

, சனி, 1 ஜூன் 2024 (14:50 IST)
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகள் காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
 
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ், தலைமையில், மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் காணொலி வாயிலாக இன்று (ஜூன் 1) நடைப்பெற்றது.
 
இக்கூட்டத்தில், அனைத்து மின் பகிர்மான தலைமைப் பொறியாளர்கள், மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் மின்சார தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.
 
கடந்த மே 2 அன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலத்தின் மின் தேவை 20,830 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தின் உச்ச பட்ச மின் தேவை, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து, நேற்றைய தினம் 4769 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
 
இந்த மின் தேவையினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வெளி மின்சந்தை, மின் பரிமாற்றம் மற்றும் குறுகிய கால ஒப்பந்தம் வாயிலாக எந்த வித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டது. மேலும், மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
 
இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகள் காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது. இத்தகைய மின் தடைகள் ஏற்படும் போது, உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தடையில்லா, சீரான மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக, மின் தடை ஏற்படும் இடங்களில், சம்பந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் கள ஆய்வு செய்து, மின் தடைக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
 
பராமரிப்பு பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின் நிறுத்தங்களின் போது, மின் தடைபடும் நேரம் குறித்து மின் நுகர்வோர்களுக்கு முன்னரே குறுந்தகவல் (SMS) மூலம் தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
பொது மக்கள் மின் தடை தொடர்பான புகார்களை தெரியப்படுத்த மின்னகம் (94987 94987), மின் நுகர்வோர் சேவை மையம் 24X7 இயங்கி வருகிறது. மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 முறைப்பணிகளில், ஒவ்வொரு முறைப்பணிக்கும் 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 65 பணியாளர்கள் கொண்டு 24x7 மணி நேரமும் இயங்கி வருகிறது.

 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரவு நேரங்களில் மின் விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரி செய்யும் பொருட்டு, 60 சிறப்பு நிலை குழுக்கள் (SQUAD) அமைக்கப்பட்டு, பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வு கூட்டத்தில், இயக்குநர்கள், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்ட அய்யாக்கண்ணு..! எதற்காக தெரியுமா.?