கடந்த 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்தான் முதன்முதலாக கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்க, சுமார் 100 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியது மத்திய அரசு. ஆனால் இந்த திட்டத்திற்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி திமுக ஆட்சி மாறி அதிமுக ஆட்சி வந்தபின்னர் கடந்த 2013-ம் ஆண்டில், இந்தத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த தமிழக அரசு, 2015-ம் ஆண்டில் நிரந்தரத் தடை விதித்தது. இதனால் வேறு வழியின்றி தமிழகத்தில் மீத்தேன் திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்தத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்த அதே, கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதால் தமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்காதா? மத்திய அரசு திருந்தவே திருந்தாதா? என தமிழக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.,