அதிமுக சார்பில் நடக்கவுள்ள இப்தார் விருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை கொந்தளிக்க செய்துள்ளது.
சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த தினகரனை, பழனியப்பன், செந்தில் பாலாஜி மற்றும் தோப்பு வெங்கடாச்சலம் உட்பட 35 எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, தினகரனுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நடத்தப்படும் இப்தார் இந்த முறை ஜூன் 21 (இன்று) மாலை நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழில் தலைமை கழக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலேயே இந்த நிகழ்ச்சி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தினகரன் ஆதரவாளர்களை கொந்தளிக்க செய்துள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியை நாம் புறக்கணிக்க வேண்டும் என தினகரன் ஆதரவாளர்களில் சிலர் கூறிவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அப்படி புறக்கணித்தால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சியை கொடுக்கும். அல்லது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அது தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் என அதிமுக தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.