தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவியாக வழங்கும் சிறப்புத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழக அரசு கடந்த மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள தொழிலாளர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவியாக ரூ 2000 அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதற்காக ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சொன்னபடி அந்தத் திட்டத்தை இன்று முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தில் பயன்பெறுவோரின் விவரங்களை கடந்த ஒரு வாரமாக சேகரித்து வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள தொழிலாளர்களின் பட்டியலை தயார் செய்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்கள் மூலம் குடும்பத் தலைவி பெயர், கணவர்-தந்தை பெயர், பிறந்த தேதி, வீட்டு எண், தெருவின் பெயர், குடும்ப அட்டை விவரம், குடும்பத் தலைவியின் கைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவை பெறப்பட்டுள்ளன.
முழுவிவரம் தயாராகியுள்ள நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே இந்த நிதியுதவி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த நினைத்தது. இந்த திட்டம் தேர்தலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறது அதிமுக அரசு. அதனால் இன்று இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இருந்து கானொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இந்த பணம் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் 35 லட்சம் ஏழைக் குடும்பங்கள், நகர்ப்புறங்களில் 25 லட்சம் ஏழைக் குடும்பங்கள் என வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெற இருக்கின்றன.