சென்னையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடந்த தாக்குதலுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு ஆளுனரின் ராஜ்பவன் இல்லத்தில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அடுத்ததாக சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது மர்ம கும்பல் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி அலுவலகங்கள், அரசு முக்கியஸ்தர்கள் இடங்களின் மீது நடந்து வரும் இந்த தாக்குதல்கள் குறித்து ஆளும் திமுக அரசிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடந்த தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை ஒரு கட்சி அலுவலகம் மீது, அதுவும் திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி அலுவலகம் மீதே தாக்குதல் நடந்திருக்கிறது. யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதை தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னதுபோல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கி கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடந்த தாக்குதல் குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்” என பேசியுள்ளார்.