மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் தவறான வழிக்குத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாலியல் தேவைகளுக்கு வழிநடத்திய விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் நிர்மலா தேவி மாதம்தோறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். நீதிமன்றத்துக்கு ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிர்மலா தேவி, தனக்கு சாமி வந்துள்ளதாகக் கூறி நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டார். அப்போது தன் மீது குற்றம்சாட்டிய மாணவிகள், தூக்கிலிட்டு இறந்து விட்டதாகக் குறிசொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
கவனத்தை ஈர்த்த இந்த வழக்கின் விசாரணையின் போது உசிலம்பட்டியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் நிர்மலாதேவியைக் காணவருவது வழக்கம். இவர் தன்னை நிர்மலாதேவியின் ரசிகர் எனக் கூறிக்கொள்கிறார். நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போதும் அன்பழகன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஆனால் நிர்மலா தேவி வராததால் அவர் அதிருப்தியடைந்த அவர் நிர்மலாதேவி உடல்நலம் பெறவும், வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டியும் நிர்மலாதேவி எந்த இடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டாரோ அதே இடத்தில் அமர்ந்து ஒரு நிமிடம் தியானம் செய்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அதன் பின் அந்த இளைஞர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.