Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

Advertiesment
EPS Stalin

Siva

, ஞாயிறு, 25 மே 2025 (13:02 IST)
ரெய்டுகளுக்கு பயந்து நீதி ஆயோக் கூட்டத்துக்கு சென்றதாக எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில்  ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்தவர் ஈபிஎஸ் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மாநில முதல்வர்கள் பங்கேற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைநகர் தில்லிக்கு செல்கிறேன் என்ற செய்தி வெளியானதுமே, அரசியல் எதிரிகள் வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். “இத்தனை ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இந்த முறை கலந்து கொள்வது ஏன்?” என்றும், “டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுகளில் கிடைத்துள்ள ஆவணங்களால் எதிர்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க முதல்வர் செல்கிறார்” என்றும், “வெள்ளைக் கொடி ஏந்திச் செல்கிறார்” என்றும் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு, அலாதி இன்பம் கண்டனர் அரசியல் எதிரிகள். ஆதரவளிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் இயக்கம் திமுக என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். 
 
முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பண்பட்ட அரசியல் தலைவர்களும் திமுகவின் நிலைப்பாட்டை நன்கு அறிந்தவர்கள். இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிப்பதற்கான நீதி ஆயோக் கூட்டம் என்பதாலும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகக் கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிலைப்பெற்றிருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாக - மாநில முதல்வராக அதில் பங்கேற்றேன்.
 
குடும்பச் சொந்தங்கங்கள் மீதும் வியாபாரக் கூட்டாளிகள் மீதும் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் ரெய்டு நடத்தியதும், சொந்தக் கட்சியினர் உள்பட யாருக்கும் தெரியாமல் அவசரமாக தில்லிக்குப் பறந்து சென்று, அங்கு மீடியாக்கள் சூழ்ந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் என்று கூறிவிட்டு, 4 கார்கள் மாறி மாறி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பார்த்து, தன்னையும் கட்சியையும் ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்துக் கூட்டணி அமைத்தவர், என்னுடைய தில்லிப் பயணம் குறித்து ஏதேதோ அளந்துவிட்டதை இரசித்தபடியே தில்லிக்குப் புறப்பட்டேன்.
 
2045-ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4.5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்பதைப் பிரதமரிடம் தெரிவித்தேன். அதாவது, தற்போது இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 10% அளவிற்கு உள்ளது. அது 15% அளவிற்கு அமையும் என்பதையும், அதற்கேற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை திமுக அரசு முன்னெடுத்திருக்கிறது என்பதையும் இந்தியத் தலைநகரில் பெருமையுடனும் நம்பிக்கையுடனும் தெரிவிக்க முடிந்தது.
 
தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான குருதியோட்டமாக இருப்பதை நாடு நன்கு அறியும். குறிப்பாக, திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் இணைந்த அளவிலான மாநில வளர்ச்சியை முன்னெடுப்பது வழக்கமாக உள்ளது. அதுபோலவே, இந்தியாவின் பாதுகாப்பு என்று வரும்போது எவ்வித சமரசமுமின்றி, நாட்டின் ஒற்றுமைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் உண்மையான தேசப்பற்று கொண்ட இயக்கமாகத் திமுக இருப்பதைப் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே நாடு கண்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களும் அதே வழியைத்தான் மேற்கொண்டார். 
 
காஷ்மீரில் ஊடுருவி, அப்பாவிச் சுற்றுலாப் பயணிகளை ஈவிரக்கமின்றி கொன்ற பயங்கரவாதிகளின் கொடுஞ்செயலுக்குச் சட்டப்பேரவையில் கண்டனம் தெரிவித்ததுடன், பயங்கரவாத ஒழிப்புக்காக இந்திய இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவாக இருப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் என் தலைமையில் பேரணியும் நடைபெற்றது.பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களே இத்தகைய பேரணியை நடத்தவில்லை என்றும், திமுக அரசு ஏன் நடத்துகிறது என்று உள்நோக்கத்துடன் வைக்கப்பட்ட விமர்சனங்களைப் புறந்தள்ளி, கூட்டணிக் கட்சியினர் பங்கேற்புடனும், முன்னாள் படைவீரர்கள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்புடனும் அந்தப் பேரணி வெற்றிகரமாக நடந்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்தியது. 
 
இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்பதை வெளிநாடுகளில் வலியுறுத்தும் குழுக்களில், ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ள இந்திய குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்று, தன் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி.அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு. அந்த வகையில்தான், பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டின் நிலையைத் தெரிவித்ததுடன், பிரதமர் அவர்களிடம் தமிழ்நாட்டுக்கான திட்டங்களையும், நிலுவையில் உள்ளவற்றையும் நேரடியாகவே வலியுறுத்தினேன். 
 
நாட்டின் நலனை எப்படி திமுக விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமர்சனம் செய்பவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது. நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானதாக உள்ளது. அதில் எவ்வித சமரசமுமின்றி, நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றிகண்டு வருகிறோம். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்றவை திமுகவினரைக் குறி வைத்ததுபோல இந்தியாவில் வேறு எந்தக் கட்சியையும் குறிவைத்ததில்லை. அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு சட்டரீதியான போராட்டத்தின் மூலம்தான் வென்று வருகிறோமே தவிர, எதிர்க்கட்சியைப் போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை. 
 
அதுவும் அதிமுக ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான எஃப்.ஐ.ஆர்.கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்குத் திமுக ஏன் சமரசம் செய்ய வேண்டும்? அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்டமீறலானவை என்பதை உச்சநீதிமன்றக் கருத்துகள் மூலம் உறுதி செய்திருக்கும் அரசுதான் திமுக அரசு 
 
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி