திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றிவரும் நேசபிரபு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றிவரும் நேசபிரபு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நேசபிரபுக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதுகுறித்து முதல்வர் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளார் நேசபிரபு தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரை உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளேன். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் நேசபிரபு தற்போது தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.