பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துச்சாமிபுரத்தில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. இதற்கிடையே, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதில் ஆலையில் இருந்த 5 அறைகள் முழுவதுமாக தரைமட்டமாகின.
இதனால் பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் மீட்கப்பட்டு கல்லம நாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.