தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று மயிலாடுதுறையில் நடந்த அரசு விழாவில் மீனவர் ஒருவருக்கு நிவாரண நிதி கொடுத்த நிலையில் அந்த நிதியை மேடையிலேயே அந்த மீனவர் திருப்பி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், அதன் பிறகு இயற்கை பேரிடரால் விசைப்படகு சேதம் அடைந்த மீனவர்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 2 லட்சத்தை வழங்கினார். இதை பெற்றுக் கொண்ட மீனவர் ரமேஷ் என்பவர் முதல்வரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த நிலையில் அந்த காசோலையை அவரிடம் திருப்பிக் கொடுத்தார்.
ஆனால் முதல்வர் அந்த காசோலையை வாங்கவில்லை என்பதை அடுத்து அருகில் உள்ள அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் கொடுக்க அவர் அதை வாங்கி அருகில் இருந்த அன்பில் மகேஷிடம் கொடுத்தார். மீனவர் ரமேஷின் இந்த செயல் திமுகவினருக்கு ஆத்திரத்தை அளித்த நிலையில் அவரை பாதுகாப்பு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
அப்போது தனது விசைப்படகு சேதம் அடைந்ததற்கு ஐந்து லட்சம் ரூபாய் கேட்டு மனு அளித்து இருந்தேன் என்றும் ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது இரண்டு லட்ச ரூபாய் மட்டும் நிவாரணத் தொகையாக வழங்குவதை நான் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றும் எனக்கு முழுமையான தொகை கிடைக்க வேண்டும் என்றும் அதனால் தான் காசோலையை திருப்பிக் கொடுத்தேன் என்றும் கூறினார்.
ஆனால் ரமேஷின் விசைப்படகின் மதிப்பு கணக்கிடப்பட்டு இரண்டு லட்ச ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்பட்டது என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.