திண்டுக்கல் மாவட்ட பூ விவசாயிகள் பூக்களைப் பறித்து மாடுகளுக்கு உணவாக வைக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால், 11.30 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். 2.34 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகில் இதுவரை 60,107பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 2902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவால் உலகம் முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியதால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயமும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விளைந்து விற்பனைக்குத் தயாரான நிலையில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேல் பூக்களைப் பயிரிட்டு இருந்த விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பூ வியாபாரிகள் பூக்கள் பூத்து நிற்கும் நிலையில் அவற்றைப் பறித்து மாடுகளுக்கு தீவனமாக வைக்கின்றனர். இதனால் நாள்தோறும் 100 டன்னுக்கு மேலாக சம்பங்கி பூக்கள் வீணாகிவருகிறது என சொல்லப்படுகிறது.