தமிழகத்தில் நிலவிடும் மண்ணெண்ணெய் பற்றாக்குறையை தவிர்க்க அதை முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் அமைச்சர் காமராஜ்.
தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று டெல்லிக்கு சென்றார். அங்கு நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
அந்த சந்திப்பு குறித்து கூறிய அவர் “தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் தட்டுபாட்டை போக்க முழுமையாக மண்ணெண்ணெய் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுள்ளேன். ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தவிர்க்க வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.
தற்போது எரிபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சத்தால் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட உள்ளது. கேஸ் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு 6 லிட்டருக்கு பதிலாக 3 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 3 லிட்டருக்கு பதில் 1 லிட்டரும் மண்ணெண்ணெய் வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.