தஞ்சாவூரைச் சேர்ந்த அமமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ரெங்கசாமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சோதனை நடத்தினர்.
ரெங்கசாமி, பாபநாசம் அருகேயுள்ள மலையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்போது தளவாய்ப்பாளையம் வீரையன் நகரில் வசித்து வருகிறார். 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பின்னர் டி.டி.வி. தினகரனின் அமமுக கட்சியில் சேர்ந்தார். அதன்பின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர்.
ரெங்கசாமி எம்.எல்.ஏ. பதவியில் இருந்தபோது, வருமானத்தைவிட அதிக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தஞ்சாவூர் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ரெங்கசாமியின் வீட்டில் சோதனையைத் தொடங்கினர். போலீசார் 10 பேர் கொண்ட குழுவுடன், துணைக் கண்காணிப்பாளர் ஆர். அன்பரசன் தலைமையில் இந்த சோதனை நடந்து வருகிறது.
சோதனை முடிந்த பிறகு மட்டும் முழுமையான தகவல்கள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.