ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 4 நாட்களில் தோற்கடிக்கும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டும் வரும் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக நியூசிலாந்துடனான டெஸ்ட்டில் இந்திய அணி சொந்த மண்ணிலேயே வொயிட் வாஷ் செய்யப்பட்ட நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற அவசியமாக உள்ளது.
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா நான்கே நாட்களுக்குள் வீழ்த்தும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராண்டன் ஜூலியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “இந்திய அணியின் டாப் ஆர்டரில் கவலை தரும் விஷயங்கள் உள்ளது. ரோகித் சர்மா முதல் டெஸ்ட்டில் இல்லை. பும்ரா சிறந்த பவுலர்தான் என்றாலும் அவர் கேப்டனாக செயல்பட வேண்டியுள்ளதால் அழுத்தம் இருக்கும். பெர்த்தில் வெற்றிக்காக விளையாட முயற்சித்தால் அங்கேயே எல்லாம் முடிந்து விடும்.
விராட் கோலி நியூசிலாந்து ஸ்பின்னர்களிடம் அவுட் ஆனதால் இங்கு நாதன் லயன் அவருக்கு எதிரியாக இருப்பார். ஆனாலும் கோலி சிறப்பாக விளையாடும் வாய்ப்புகள் உள்ளது. பெர்த் மைதானத்தில் வேகம், பவுன்ஸ் இருப்பது கோலிக்கு சாதகம். அவர் ஏற்கனவே பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹெசில்வுட்டுக்கு எதிராக சிறப்பாக விளையாடியவர்.
அவர்களுக்கு எதிரான நல்ல தொடக்கத்தை பெற்றால் கோலிக்கு இந்த தொடர் சிறப்பானதாக அமையும். அதனால் ஆஸ்திரேலியா அவரை வேகமாக அவுட் ஆக்க வேண்டும். அவரை எளிதில் ரன்கள் எடுக்க விடக்கூடாது” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K