பூண்டின் தேவை அதிகமாக உள்ள நிலையில் வரத்து குறைந்துள்ளதால் பூண்டு விலை அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாளுக்கு நாள் பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது அதிரடியாக விலை வேகமாக உயர்ந்து கிலோ ரூ.400 வரை உச்சம் தொட்டுள்ளது.
சென்னை மார்க்கெட்டிற்கு அதிக அளவிலான பூண்டு கொள்முதல் உத்தரபிரதேசத்தில் இருந்தே நடக்கிறது. ஆனால் உத்தர பிரதேசத்தில் விளைச்சல் குறைந்துள்ளதால் பூண்டு வரத்தும் குறைந்துள்ளது என்கின்றனர் கோயம்பேடு வியாபாரிகள்.
சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் பூண்டு விலை ஏற்றத்தால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்னும் ஒரு மாத காலமாவது இந்த விலை ஏற்றம் நீடிக்கும் என கூறப்படுகிறது.