குட்கா ஊழல் உண்மைதான் எனவும், ஆனால், அதில் தனக்கு தொடர்பு இல்லை எனவும் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் பேட்டியளித்துள்ளார்.
குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ், உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. நேற்று காலை வரை நீடித்த இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விவகாரத்தில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் கமிஷனர் இன்று மாலை செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
33 ஆண்டுகள் நான் நேர்மையாக பணிபுரிந்துள்ளேன். 2016ம் ஆண்டு குட்கா சோதனை நடைபெற்ற போது நான் கமிஷனராக இல்லை. 2016 செப்டம்பர் மாதம்தான் நான் கமிஷனராக பதவியேற்றேன். குட்கா சோதனை நடைபெற்ற போது எனக்கு கீழே பணிபுரிந்த அதிகாரிகளை குட்கா விவகாரம் குறித்து விசாரனை நடத்தி எனக்கு அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தினேன்.
ஆனால், துணை ஆணையர் ஜெயக்குமார் குட்கா பற்றிய பல தகவல்களை என்னிடமிருந்து மறைத்து விட்ட்டார். அவர் சரியாக செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் என் பெயரை தவறாக சேர்த்துள்ளனர். குட்கா ஊழல் நடந்தது உண்மைதான். ஆனால், அதில் எனக்கு தொடர்பு இல்லை. இதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி நானே வலியுறுத்தினேன். ஆனால், என் மீதே பழி சுமத்தியுள்ளனர். இதில் ஏதோ சதி நடந்துள்ளது. என் வீட்டிலிருந்து எந்த ஆவணத்தையும் சிபிஐ கைப்பற்றவில்லை. நல்ல அதிகாரிகளுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை” என அவர் தெரிவித்தார்.