Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

2 மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுங்கள்.! முதல்வருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை..!!

Vanathi Srinivasan

Senthil Velan

, வெள்ளி, 3 மே 2024 (16:30 IST)
கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறைந்தபட்ச மே, ஜூன் இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். 
 
இதுதொடர்பாக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக இருக்கிறது. மேட்டூர் அணை உள்ளிட்ட அணைகள், வீராணம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. பல அணைகள், ஏரிகள் வறண்டு விட்டன. இதனால், தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில் தமிழகம் மிகப் பெரிய குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும். தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெப்பநிலை 111 பாரன்ஹீட்டை தாண்டும் என்றும், கடும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தமிழகத்தில் குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளும், வீடுகளும் அதிகரிக்க அதிகரிக்க மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் குறைந்தது இரண்டு மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மக்கள் தப்பிக்க முடியும். மரங்களை நட்டு வளர்க்க மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் அக்கறை செலுத்துவதில்லை என்பது வருத்தம் அளிக்கும் உண்மை.
 
மழை, வெள்ளத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதுபோல, கடும் கோடை வெப்பத்தில் இருந்து மக்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தை ஆளும் திமுக அரசு இதுபற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. வழக்கம்போல முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி விட்டார்.
 
பெருமழை வெள்ளத்தைப் போலவே, கடும் கோடை வெப்பமும் மிகப்பெரிய இயற்கை பேரிடர் தான். மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வீட்டிற்குள் இருக்க முடியாமலும் தவியாய் தவிக்கின்றனர். தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் தண்ணீர் பந்தல்களை அமைத்து குடிநீர், மோர் வழங்கினாலும் அது அனைவருக்கும் போதுமானதாக, சுகாதாரமானதாக இருப்பதில்லை. எனவே, ஆவின் நிறுவனம் மூலம் கோடை வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை, ஒரு ரூபாய்க்கு மோர் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும்.
 
இப்போது, பெரும்பாலான அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு இருப்பதால், மழை நீரை சேகரிக்கும் வகையில் அதனை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். குடிநீர் பஞ்சம் ஏற்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வேறு வழியே இல்லாத பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 
இப்போது நடுத்தர மக்களும் அதிகமாக ஏ.சி. பயன்படுத்துகின்றனர். 24 மணி நேரமும் மின்விசிறியை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதுவும் அதிகமான மின்விசிறிகளை பயன்படுத்த வேண்டி உள்ளது. இதனால் இந்தக் கோடை காலத்தில் வழக்கத்தை விட மூன்று நான்கு மடங்கு அதிகமாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

எனவே. குறைந்தபட்ச மே, ஜூன் இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை.

 
இந்த கோடைகாலத்திற்கு மட்டுமாவது, ஒரு மாதத்திற்கு மின் பயன்பாட்டை கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதன் மூலம் மின் கட்டண சுமையிலிருந்து மக்கள் ஓரளவுக்கு தப்பிக்க முடியும். தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று, கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க இது போன்ற நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புண்ணிய தலங்களுக்கு செல்ல சுற்றுலா ரயில் அறிமுகம்..! நெல்லை முதல் அயோத்தி வரை இயக்கம்..!