சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வெயிலுக்கு இதமான நல்ல செய்தியை தெரிவித்துள்ளது.
குமரி கடல் வளிமண்டல பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இன்று வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மழை வரும் என தெரிவித்தாலும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்குமாம்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.