திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அதிக கனமழை பெய்யும் என்ற ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருநெல்வேலியில் நேற்று இரவு முதல் கொட்டிய மழையால் பல்வேறு இடங்களில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றும் திருநெல்வேலியில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் இன்று 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதைப்போல், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று அதிக மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.