சில வாரங்களில் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாட உள்ள நிலையில் மு.க.ஸ்டாலினும் விநாயகரை வழிபட வேண்டும் என இந்து முண்ணனி மாநில தலைவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஆகஸ்டு 22 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் அமைக்கவும், கொண்டாட்டங்களுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பேசியுள்ள இந்து முண்ணனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் “தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம், பொதுநிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை. ஒவ்வொரு சிலைக்கும் 5 பேர் என நியமனம் செய்யப்பட்டு அவர்களே சிலையை அமைப்பது, அவற்றை கொண்டு சென்று கரைப்பது போன்ற பணிகளை செய்வர்” என கூறியுள்ளார்.
மேலும் “பல அரசியல் கட்சிகள் பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும், இந்து மத பண்டிகைகளை கண்டுகொள்ளாததுமாக இருக்கிறார்கள். இந்த முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்திக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும். சென்னையில் நிர்மாணிக்கப்படும் விநாயகர் சிலைகளில் ஏதேனும் ஒன்றை அவர் வழிபட வேண்டும்” என கூறியுள்ள அவர், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.