டாக்டர் ராமதாஸ் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழாசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் தன் முக நூல் பக்கத்தில் எழுதிய பதிவைப் படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகளின் ஒன்றான பாமகவின் முன்னாள் தலைவர் டாக்டர் ராமதாஸ். இவர், தமிழகத்தில் நிலவும் முக்கிய சம்பவம் நிகழ்வுகள் பற்றி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இவரது ஒவ்வொரு அறிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்ததாககப் பார்க்கப்படுகிறது.
இன்று அவர் தன் முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் செம்மொழி கனவு 2004-ஆம் ஆண்டு மத்தியில் திமுக, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் சாத்தியமானது. அதைத் தொடர்ந்து செம்மொழி குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழி தமிழ் உயராய்வு மையம் 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைக்கப்பட்டது.
கலைஞர் முதலமைச்சராக இருந்தவரை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வருகை புரிவதையும், ஆய்வுப் பணிகள் குறித்து நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், கலைஞருக்குப் பிறகு 2011-ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அவர் 2016-ஆம் ஆண்டு இறுதியில் மறையும் வரை ஒருமுறை கூட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பக்கம் எட்டிக்கூட பார்த்ததில்லை.
அவருக்குப் பிறகு முதலமைச்சராக வந்த ஓ.பன்னீர்செல்வமும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பணிகள் குறித்து எந்த அக்கறையும் காட்டியதில்லை. 2017-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பின்னர் ஒருமுறை செம்மொழி நிறுவனத்தின் அதிகாரிகளை தமது அலுவலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். ஏற்கெனவே 12 துறைகளாக இயங்கிவந்த செம்மொழி நிறுவனத்தை வெறும் 7 தற்காலிகத் திட்டங்களாக சுருக்கிவிட்டனர். அந்நிறுவனத்தால் சிறப்பாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுவந்த செய்தி இதழ் நிறுத்தப்பட்டு விட்டது. செம்மொழி ஆய்வுகளை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்குகள் போன்றவற்றிற்கு வழங்கி வந்த நிதியையும் குறைத்துவிட்டனர்.
தமிழை இப்படி ஒரு இழிநிலைக்கு தள்ள வேண்டும் என்பது தான் தமிழ் எதிரிகளின் நோக்கமாக இருக்க வேண்டும். இதுகுறித்த செய்தி வெளியானவுடன் பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்முதலில் கண்டனம் தெரிவித்தது. அதன்பயனாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் என்ற அட்சயப் பாத்திரத்தைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த உலகத்திற்கும் தமிழ் விருந்து படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை என்று தெரிவித்துள்ளார்.