உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை பாராட்டுகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
முதல்வரின் அறிவிப்பிற்கு பலரும் பாராட்டுகள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் சமூக வலைதள பக்கத்தில், பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம்.
இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.
இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் என்று தெரிவித்துள்ளார்.