வருமான வரித்துறைனர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017 நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறையினர் நாட்டிலேயே மிகப்பெரிய வருமான வரி சோதனையை நடத்தினார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா குடும்பத்தினர் அதிரடியாக நேரடி அரசியலில் இறங்கினர். இதனையடுத்து வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தினரை சுற்றி சுற்றி ரெய்டு நடத்தினர்.
கடந்த 2017 ஏப்ரல் மாதம் ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேர்தலின் போது ரெய்டு நடத்திய வருமான வரித்துறை ஆபரேஷன் 'கிளீன் மணி' என்ற பெயரில் நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தையும், அவர்கள் தொடர்புடையவர்கள் வீடுகள், அலுவலகங்களிலும் நாட்டிலேயே மிகப்பெரிய வருமான வரி சோதனையை நடத்தினர்.
இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர்.
அதன்படி அவர்கள் 2018 டிசம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் விசாரிக்கலாம் என அவர்கள் கூறியதால் நேற்று சிறையில் வருமான வரித்துறையினர் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். பல மணி நேரத்துக்கு மேல் நடந்த விசாரணையில் அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு சசிகலா, ஆம் இல்லை, தெரியாது, நினைவு இல்லை என்ற ஒற்றை வார்த்தையிலேயே பதிலளித்தாராம். இவரின் பதிலால் ஒரு பக்கம் அதிகாரிகள் அரண்டு போனாலும், பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் சசிகலா திணறினாராம்.
இதனைத்தொடர்ந்து இன்றும் சசிகலாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றே அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய சசிகலா இன்று என்ன செய்யப்போகிறார். என்னென்ன உண்மைகள் வெளிவரப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.