ஸ்பெயின் பயணம் வென்றது போல தேர்தல் களத்தில் இந்தியா"வின் வெற்றியும் அமையும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் சென்றிருந்த முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பினார். இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஸ்பெயின் பயணம் வெற்றி பெற்றது போல இந்தியாவின் வெற்றி அமையும் என்று தெரிவித்துள்ளார்.
மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்து, தேர்தல் லாபம் தேடும் அரசியல் ஸ்பெயினில் இல்லை என்றும் வேற்று மத மன்னர்களால் கட்டப்பட்ட கட்டிடத்தை ஆட்சியாளர்கள் இடித்து தகர்க்கவில்லை என்றும் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால் தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி நிரந்தரம் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், நம்முடைய வரலாற்றை நாம் சொல்ல மறந்ததால் வரலாறு இல்லாத ஒரு கூட்டம் அதனை திரிக்கிறது என்று கூறியுள்ளார்.
வதந்திகளை பரப்பியும், அவதூறுகளால் அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர் என்றும் வரலாற்றை சிதைக்க நினைக்கும் வதந்தியாளர்களை வாக்குரிமையால் விரட்டி அடிப்போம் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.