அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்குத் தவெக-வின் உயர்மட்ட மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தவெகவில் இணைந்த பின் சொந்த ஊரான கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், இது புதிய தலைமுறை ஆள வேண்டிய நேரம் என்றார். "தமிழ்நாட்டை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய். அவர் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என உறுதிபட தெரிவித்தார்.
தனது அரசியல் வழிகாட்டிகளான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போல, தாம் விஜய்க்கும் வழிகாட்டியாக செயல்படுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார். டிசம்பர் மாதத்திற்குள் தவெக கூட்டணி மேலும் பலம்பெறும் என்றும், மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் அக்கட்சியில் இணைவார்கள் என்றும் சூசகமாக தெரிவித்தார்.
மேலும், அதிமுகவின் தற்போதைய நிலையை சாடிய அவர், "எடப்பாடி பழனிசாமி இதுவரை ஒரு தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பினார்.