திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை செய்துள்ள நிலையில், இது குறித்து ஐகோர்ட் நீதிபதி ஆய்வு செய்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி புகழேந்தி நேற்று திருச்செந்தூர் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
கோவில் வளாகம் முழுவதும் சுற்றி, அவர் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகள் உள்பட பல இடங்களில் அவர் குடிநீர், சுகாதார வசதிகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்று அங்குள்ள பக்தர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
மேலும், கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதிகளில் சென்று, அங்கு உள்ள பக்தர்களிடம் குறைகளை கேட்டார். விடுதி அலுவலர், விடுதி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது திருச்செந்தூர் கோவில் அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.