Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை - ஆதியோகியில் இருந்து பேரூர் ஆதீனம் தொடங்கி வைத்தார்!

நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரை - ஆதியோகியில் இருந்து பேரூர் ஆதீனம் தொடங்கி வைத்தார்!
, சனி, 24 ஜூன் 2023 (11:53 IST)
கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் நொய்யல் நதியை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரையை ஈஷாவில் உள்ள ஆதியோகியில் இருந்து தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்திலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இன்று (ஜூன் 23) தொடங்கி வைத்தார்.
 
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் மதுரை ஆதீனம், துழாவூர் ஆதீனம், பாதரகுடி ஆதீனம், திருப்பாதரிப்புலியூர் ஆதீனம், கொங்கு மண்டல ஜீயர் உட்பட ஏராளமான ஆன்மீக தலைவர்கள் மற்றும் சந்நியாசிகள் கலந்து கொண்டனர்.
 
இவ்விழாவில் பேரூர் ஆதீனம் அவர்கள் பேசுகையில், “காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் நதி தென் கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் உற்பத்தி ஆகி கரூர் மாவட்டத்தில் காவிரியுடன் கலக்கிறது. 4 மாவட்டங்களுக்கு வளம் சேர்க்கும் நதியாக நொய்யல் திகழ்கின்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த நதியின் குறுக்கே 38 அணைகள் கட்டப்பட்டு, ஏராளமான குளங்களுடன் இந்தப் பகுதியை வளப்படுத்தி வந்தது. ஆனால், தற்போது நொய்யல் ஆற்றின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நதி பெரும் மாசடைந்துள்ளது. 
 
அதை மீட்டெடுக்கும் வகையில், அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் ‘நொய்யல் பெருவிழா’ என்ற ஒரு விழாவை ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பேரூரில் நடத்த உள்ளது. அதற்கு முன்னதாக, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ரத யாத்திரை ஈஷாவில் உள்ள ஆதியோகியில் இருந்து இன்று துவக்கப்பட்டுள்ளது” என்றார்.
 
மதுரை ஆதீனம் அவர்கள் பேசுகையில், “மக்களிடம் தூய்மை குறித்து விழிப்புணர்வு போதிய அளவு இல்லாமல் உள்ளது. அந்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், நதிகளை புனிதமாக பார்க்கும் கலாச்சாரத்தை மேம்படுத்தவும் இந்த நொய்யல் ரத யாத்திரை உதவும்” என கூறினார்.
 
ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் பேசுகையில், “நொய்யல் நதியின் நீராதாரத்தை அதிகரிக்க விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறுவது மிகவும் அவசியம். நொய்யல் வடிநிலப் பகுதியில் சுமார் 12 லட்சம் விவசாய நிலங்கள் உள்ளன. ஒரு ஏக்கரில் 100 மரங்கள் நட்டாலே 12 கோடி மரங்களை நட்டு விட முடியும். அந்த வகையில், காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் நொய்யல் வடிநிலப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இந்தாண்டு 12 லட்சம் மரக்கன்றுகளையும் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
 
மேலும், “பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சண்முக சுந்தரம் அவர்களின் தலைமையில் நொய்யல் நதிக்கு புத்துயிரூட்டும் ஒரு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் சங்கம், சிறுதுளி, கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற உள்ளன.
 
குறிப்பாக, நொய்யல் நதியில் நிரந்தர நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்துவது, நதியில் கழிவுநீர் கலக்காமல் தூய்மையாக பராமரிப்பது, பிளாஸ்டிக்  கழிவுகள் சேராமல் தடுப்பது ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கங்கள் ஆகும்.
 
மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் சுமார் 180 கி.மீ தூரம் பயணிக்கும் நொய்யல் நதியில் ஒவ்வொரு குறிப்பிட்ட கி.மீ தூரப் பகுதிகள் வெவ்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் 4 கி.மீ ஈஷாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பே காவேரி கூக்குரல் இயக்கம் தொண்டாமுத்தூர் பகுதியில் சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி அவர்களின் தோட்டங்களில் நட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.
 
இவ்விழாவின் தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்களின் வள்ளி கும்மி நிகழ்ச்சியில், ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டைட்டன் நீர்மூழ்கி: எச்சரிக்கைகளை ‘ஆதாரமற்ற கூச்சல்’ என நிராகரித்த ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைவர்